கடை வீதி

கண்டதில், கற்றதும், கவர்ந்ததும்...

Thursday, December 22, 2005

இரயில் பயணங்களில்....

சமீபத்தில் பெங்கலூருலிருந்து சென்னைக்கு பகல் நேர இரயில் பயணம் செய்த போது சில விசயங்களை கவனித்தேன்.
நான் சிறுவனாயிருந்த போது, இரயில் வண்டியைப் பார்த்தால்... கையை வேகமாக அசைத்துக் கொண்டே "டா...டா.." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவோம். சில சிறுவர்கள் சிறு கல்லை இரயில் வண்டியை நோக்கி எறிவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் கையையும் அசைப்பதில்லை, கல்லையும் எறிவதில்லை.

இரயில் வண்டியில் என் பார்வையில் பட்ட ஒரு ஹைக்கூத் தனமான ஒரு வரி...

"குடைக்குள் மழை...
குடை ஓட்டை".

Monday, December 12, 2005

எங்கள் பாரதி

December 11, மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த தினம்.

11-12-1882, எங்கள் கவி அவதரித்த தினம்.
கவிதையில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. எனினும், என்னுள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கவிஞன் பாரதி. தமிழர்களில் தலைசிறந்த மனிதன் பாரதி.
பாரதியின் அனைத்துப் பாடல்களும் எனக்கு மிகப்பிடிக்கும்... இதோ ஒரு உதாரண துளிகள்...


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
***************************************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டென் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தென்;
வெந்து தணிந்தது காடு; -- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
***************************************************

Thursday, December 01, 2005

நீங்கள் கதாநாயகரா... வில்லரா(!) ??

எனக்கு சிறு வதிலிருந்தே ஒரு சந்ததேகம்.... (ஹி! ஹி! ஹி... திரைப் பட சந்தேகம் தான்...)

கடை வீதியில் (market), வில்லன் வயதான ஏழை வியாபாரியிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருப்பார். வ.ஏ.வியாபாரி தன்னிடம் பணம் இல்லையென்றோ அல்லது தன் மகள் கல்வி/திருமணச் செலவுக்குப் பணம் தேவை என்றோ சொல்லுவார். வில்லன் தன் அக்மார்க் (AGMARK) சிரிப்பை சிரித்துவிட்டு வ.ஏ.வியாபாரியின் தள்ளு வண்டிக் கடையை அடித்து நொறுக்க எத்தனிக்கும் நேரம்... கதாநாயகன் திடீரென்று திரையில் தோன்றி வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை தடுத்து... ஒரு குத்து வசனம் (punch dialogue!!!) பேசிய பிறகு சண்டையை ஆரம்பிப்பார். சண்டையின் போக்கில், வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை வ.ஏ.வியாபாரியின் கடை மற்றும் பக்கத்து ஏழைகளின் கடைகளில் குறி தவறாமல் தள்ளிவிட்டு கடைச் சாமான்களை நொருக்கி விடுவார்.

என் சந்தேகமெல்லாம் இதில் யார் வில்லன்? யார் கதாநாயகன்??. வில்லனாவது ஒரு கடையோடு நிறுத்தி இருப்பார். ஆனால், நம் கதாநாயகன்???

இப்போதெல்லாம் கடை வீதியில், டீக்கடை, மண்பாண்டக் கடை, கலர்ப்பொடி கடை, பிளாஷ்டிக் (plastic) பாத்திரக் கடை மற்றும் காய்கறிக் கடை போன்றவற்றைப் பார்த்தால்.. நான் நினைப்பது எல்லாம்....

"கடவுளே! கதாநாயகன் இந்தக் தெருவுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்..."

தட்ப வெட்ப சந்தேகம்

ஒவ்வொரு வருடமும் தட்பவெட்ப நிலை மாறும்போது தவறாமல் நான் கேட்கும் அங்கலாய்ப்பு...

சித்திரையில்...

"அப்பப்பா!!! என்ன வெயிலு! என்ன வெயிலு!! போன வருடம் இந்த மாதிரி இல்லை. வெக்கை குறைவாத்தான் இருந்தது"



மார்கழியில்...

"இப்ப பரவாயில்லை... போன வருடம் பார்க்க வேண்டுமே.. காலையில் பஜனைக்கு எழுந்திருக்கவே முடியாது.. அப்பிடி ஒரு குளிர்."



சரி, சரி.. வெப்பம் சென்ற வருடம், இந்த வருடத்தைவிட குறைவாக இருந்திருக்கிறது. அப்பொழுது, கெம்ப கவுடா காலத்தில் இந்த பெங்களூர்..., சுவிட்சர்லாந்து மாதிரி இருந்திருக்கும். ராஜ ராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூர்..., காஷ்மீர் மாதிரி இருந்திருக்கும்.